கள்ளக்குறிச்சி மாணவியின் தற்கொலை வழக்கு பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பள்ளி மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவன் மாலை 4 மணி அளவில் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, படுகாயமடைந்த மாணவனை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கை, கால், தலையில் காயம் மற்றும் மூக்கில் தொடர்ந்து ரத்தம் வெளியேறிய நிலையில் முதலுதவி சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு வந்த காஞ்சிபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆசிரியர் மாணவனை கண்டித்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் காஞ்சிபுரம் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.