விவசாயிகள் கோரிக்கை ஏற்று அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இந்த ஆண்டு இயக்கப்பட தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு கரும்பு அரவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலை முன்பாக நேற்று முன்தினம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகள் கரும்பு அரவைக்காக இங்கு அனுப்புகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.22 கோடி வரையும், உற்பத்தியாளர்களுக்கு சம்பளம் மற்றும் பிற செலவினங்களுக்காக ரூ.6 கோடியும் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றின் போது மூடப்பட்ட இந்த ஆலையை இன்னும் திறக்கவில்லை. இந்த ஆண்டு கரும்பு அரவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலை முன்பாக தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதுரை சுற்றுப்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் கரும்பும், சிவகங்கையில் 1.50டன் கரும்பும் அறுவடைக்கு தராக உள்ளது. இவை அனைத்தும் அலங்காநல்லூர் கொண்டுவரவே வாய்ப்புகள் அதிகம்.
2022ஆம் ஆண்டுக்கான அரவையை உடனே துவங்க விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையின் உபமின் நிலையமும் செயல்படாமல் உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.110 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் அரசின் கவனத்திற்க்கு கொண்டுவந்துள்ளனர். எனவே அரசு இந்த ஆண்டு கரும்பு ஆலையை உடனே திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சித் தலைவரை கேட்டுக்கொள்கிறேன். என வேண்டுகோள் விடுத்துள்ளார்.