
கோடை விடுமுறை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணித்து வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதியும், தனியார் பள்ளிகள் ஜூன் 5-ம் தேதியும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் நாளை (மே 30) ஊர் திரும்ப திட்டமிட்டு வருகின்றனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் பெரும்பாலானோர் தத்கால் மூலம் பயணச்சீட்டு பெற முயற்சிக்கும் முடிவில் இருக்கின்றனர். மேலும் சிலர் தனியார் பேருந்துகளையும் நாடுகின்றனர். இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்பும் சூழலை பயன்படுத்தி, வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது..,
திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்துகளில் சென்றால், சுமார் 16 மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால், பயண நேரத்தை குறைக்கவே பெரும்பாலும் ஆம்னி பேருந்துகளை நாடுகிறோம். தற்போது அதிகபட்சமாக ரூ.3,600 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் இந்த பிரச்சினை வருகிறது. எனவே, அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறும்போது..,
‘‘ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த வகையிலான வாகனம் என்பதால் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. அதிகபட்ச கட்டணம் உரிமையாளர்கள் சார்பில் நிர்ணயிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுடன் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். அதற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை’’ என்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது,
‘‘ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம். பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800-425-6151, 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்புவோர் வசதிக்காக 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு சொகுசு பேருந்துகளின் இருக்கைகள் முன்பதிவு நிறைவடையவில்லை. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றனர்.
