

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், வடமாநில பயணி ஒருவரும், பாதுகாப்பு பணியில் இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மத்திய தொழில்பாதுகாப்பு படை தலைமை காவலரும், சக பயணிகள் முன்னிலையில், கட்டி புரண்டு சண்டை போட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கொடுத்த புகாரின் பேரில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணியை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்து விசாரணை*

பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசிம் கமல் ஃபருக்கி (வயது -35) முதுநிலை பட்டதாரி இளைஞரான இவர், சென்னையில் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடந்த, நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக, பிஹாரிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார்.
சென்னையில் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்ட இவர்,அதன் பின்பு அவருடைய சொந்த ஊரான பாட்னாவிற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள், விமானத்தில் செல்வதற்காக, சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் ஒன்றுக்கு வந்தார்.
அப்போது சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலர் சமர் தினேஷ் பாய் (வயது-50) என்பவர், பயணி முகமது அசிம் கமல் ஃபருக்கியை நிறுத்தி விசாரித்தார்.
அப்போது பயணி பாட்னா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் செல்ல இருப்பதாக கூறினார். அதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலர், இன்னும் போர்டிங் தொடங்கவில்லை.போர்டிங் தொடங்கிய பின்பு தான் உள்ளே அனுமதிக்க முடியும் என்று கூறினார்.

அப்போது பயணி, நான் உள்ளே போய் இருந்து கொள்கிறேன். போர்டிங் தொடங்கியதும் போர்டிங் பாஸ் வாங்கி விட்டு விமானத்தில் சென்று ஏறுகிறேன் என்று கூறினார். ஆனால் மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலர் அவரை உள்ளே விட மறுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு பயணியை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதை அடுத்து பயணிக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலருக்கும் இடையே வாக்குவாதங்கள் அதிகரித்து, இருவரும் கைகலப்பிலும் ஈடுபட்டனர். சென்னை விமான நிலைய நுழைவு வாசலில், இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.அங்கு நின்ற சக பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், சண்டையை விலக்கி, சமாதானம் செய்தனர். ஆனாலும் இருவரும் இந்தியில் ஒருவரை ஒருவர் மோசமாக திட்டிக் கொண்டனர்.
இதை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலர், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சொந்த ஊரான பாட்னாவுக்கு செல்ல வந்திருந்த, விமான பயணியின் பயணத்தை ரத்து செய்து, அவரைக் கைது செய்தனர்.
அதோடு அவர் மீது, கையால் தாக்குதல், அசிங்கமான தடித்த வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் வட மாநில பயணி ஒருவரும்,வட மாநிலத்தைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலரும், விமான நிலைய வாசலில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு, கட்டி புரண்டு சண்டை போட்டு, அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

