• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

போலீசார் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை ஆட்டோவில் இழுத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது..,

ByPrabhu Sekar

Jul 1, 2026

சென்னையில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல், போக்குவரத்து போலீசார் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை ஆட்டோவில் இழுத்துச் சென்ற இளைஞர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சாலை தடுப்புக்காக போக்குவரத்து போலீசார் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை, ஆட்டோவில் சென்ற இளைஞர்கள் அகற்றாமல், அதனை இழுத்துக்கொண்டே நீண்ட தூரம் சென்றனர்.

அந்த நேரத்தில் பின்னால் அவசர சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் தொடர்ந்து சைரன் ஒலியெழுப்பியபோதும், ஆட்டோ வழிவிடாமல் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆம்புலன்ஸ் சில நிமிடங்கள் முன்னேற முடியாமல் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த காட்சிகளை அங்கு சென்ற பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி, பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரலான வீடியோவின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருடன் பயணித்த மற்ற இளைஞர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடுவது ஒவ்வொரு வாகன ஓட்டியின் சட்டப்பூர்வ மற்றும் மனிதநேயக் கடமை என்பதை போலீசார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.