• Sat. Apr 20th, 2024

மொடக்குறிச்சியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்

ByA.Tamilselvan

Nov 7, 2022

மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யும் விவகாரத்தில் குழப்பம் நீடிப்பதுடன், மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக கூறி வணிகர் சங்கத்தினர் இன்று மொடக்குறிச்சியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான இடத்தை மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.
இந்நிலையில் மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் இடம் தேர்வு செய்வதில் காலம் தாழ்த்துவதுடன், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக வணிகர் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். மேலும் மொடக்குறிச்சிக்கு பதில் வேறு இடத்தை தேர்வு செய்து கொடுப்பதாக தகவல் வெளியானதை அடுத்து மொடக்குறிச்சி அனைத்து வணிகர்கள் சார்பில் கடந்த வாரம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மொடக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் கிராம கமிட்டி தலைவர் கொளந்தசாமி தலைமையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் அரசு ஆணைப்படி மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும், மொடக்குறிச்சியில் தற்காலிக நீதிமன்றத்திற்கான இடம் இருந்தும் அதனை அரசுக்கு பரிந்துரை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் மொடக்குறிச்சி தாசில்தாரைக் கண்டித்து நாளை, இன்று மொடக்குறிச்சியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும், அதேபோல் மொடக்குறிச்சி நால்ரோட்டில் ஒன்று திரண்டு பேரணியாகச் சென்று மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் எதிரொலியாக மொடக்குறிச்சியில் வணிகர் சங்கம் சார்பில் காலை ஆறு மணிக்கு கடை அடைப்பு போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கடை அடைப்பு போராட்டத்தில் மொடக்குறிச்சி ஓலப்பாளையம் வேலம்பாளையம் மொடக்குறிச்சி நால்ரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால் மொடக்குறிச்சி பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *