



இனவெறி வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் மார்ச் 22-ம் தேதி செல்ல உள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2023 மே 3-ம் தேதி மணிப்பூரில் நடைபெற்ற மோசமான வன்முறை சம்பவங்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கவும், 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இடம் பெயரவும் வழிவகுத்தது. இன்றளவும் அந்த மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்களில் மக்கள் தஞ்சமடைவது நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அந்த மாநில உயர் நீதிமன்ற ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டப்பணிகள் குழு செயல் தலைவருமான பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் செல்ல உள்ளனர். இதன் ஒரு பகுதியாக அங்குள்ள நிவாரண முகாம்களுக்கு மார்ச் 22-ம் தேதி அவர்கள் செல்ல உள்ளனர்.
அப்போது முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன. அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தேவை இருப்பதை நீதிபதிகளின் பயணம் எடுத்துரைக்கிறது. அனைத்து நிவாரண முகாம்களிலும் சென்னையைச் சேர்ந்த 25 மருத்துவர்கள் மருத்துவ முகாம்களை நடத்த உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. ஆனாலும், வன்முறையால் பாதிக்கப்பட் மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தராததை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இனவெறியால் ஏற்பட்ட கலவரத்தால் நுற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அகதிகளாக இடம் பெயர்ந்து 2 ஆண்டுகளாக தவித்து வரும் மணிப்பூர் மாநில மக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

