• Mon. Apr 21st, 2025

தருமபுரியில் கலெக்டர், எஸ்.பியை மிரட்டிய திமுக மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்!

ByP.Kavitha Kumar

Mar 19, 2025

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்தவர் தடங்கம் சுப்பிரமணி. இவர் கடந்த பிப்ரவரி கடைசி வாரத்தில் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தர்மச்செல்வன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தருமபுரியில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற திமுக கிழக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், “நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது. நீங்கள் நினைக்கிற ஆட்களையெல்லாம் மாற்ற முடியாது. நான் லெட்டர் கொடுத்தால் தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன்” என்று பேசிய ஆடியோவெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது.

அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித்தலைவர் கண்டனம் தெரிவித்தனர். இந்த பேச்சு குறித்து தர்மசெல்வனை திமுக தலைமை அழைத்து விசாரித்தது. இந்த நிலையில், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.தர்மசெல்வனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ஆ. மணி தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில், திமுக மாவட்ட பொறுப்பாளரின் பேச்சு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அவரை பதவியில் இருந்து திமுக மாற்றியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.