

திண்டுக்கல் அருகே வண்ணம்பட்டியில் முனியப்பன், ஹேமலதா தம்பதியினரின் மகள் ப்ரதீக்ஷாவின் காதணி விழாவில், தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் தாய் மாமன் உறவினர்கள் சீர்வரிசை கொண்டு வந்த விநோத நிகழ்ச்சி .

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ளது வண்ணம்பட்டி கிராமம். இங்கு முனியப்பன், ஹேமலதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ப்ரதீக்க்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. முனியப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முனியப்பன், ஹேமலதா இவர்களின் குழந்தை ப்ரதீக்க்ஷாவிற்கு நேற்று (21.08.22) காதணி விழா வண்ணம்பட்டியில் நடைபெற்றது.
குழந்தைக்கு தாய்மாமன்கள் 6 பேர் உள்ளனர். இவர்கள் சென்னை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தாய்மாமன்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தேவராட்டத்துடன் வாணவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க பல்வேறு பல வகையுடன் மாட்டு வண்டியில் தாய் மாமன்கள் ஊர்வலமாக வந்தனர். ஊர் எல்லையில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக கிளம்பி விழா மேடை வரை சீர்வரிசையுடன் வந்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. காலம் மாறி வரும் நிலையில் தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காமலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் இது போன்று விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
