



மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் உலா வந்த கரடியை நாய் ஒன்று துரத்திய சிசிடிவி காட்சிகள் வைரல் வெளியாகி உள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, சிறுத்தை, கரடி, கட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் உதகை புதுமந்து பகுதியில் உள்ள பேக்கரிக்குள் புகுந்த கரடி பிஸ்கட் சாப்பிட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடி உலாவரும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சாலையில் உலா வந்த கரடியை நாய் ஒன்று துரத்திய காட்சிகளும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக உலா வரும் கரடியை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

