நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள எருமாடு பகுதி முதுமலை வெளிமண்டல வனப்பகுதி மற்றும் கேரளா மாநிலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இங்கு புலி,சிறுத்தை, கரடி, காட்டு மாடு,காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் எருமாடு பகுதியில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு,சாலைகள்,தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு எருமாடு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை அங்கு வளர்க்கப்படும் வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்று உள்ளது.நீண்ட நேரமாக வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றுள்ளது.அப்போது வளர்ப்பு நாய் சிறுத்தையை கண்டதும் குறைத்து கொண்டு அதிக சத்தம் எழுப்பியது.

ஆனால் சிறுத்தை நாயை எப்படியாவது வேட்டையாடும் நோக்கில் நாயுடன் சண்டையிட்டு இறுதியில் ஏமாற்றத்துடன் வனப்பகுதிக்கு சென்றது.இந்த காட்சிகள் குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.எனவே வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.