மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் அடுத்துள்ள குளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளமகாதேவன் ரஷ்யா ஆகியோரின் மகள் யாழிசை வயது 9. இவர், விக்கிரமங்கலம் அருகே உள்ள வி. கோவில்பட்டி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து இங்குள்ள அரசு பள்ளியில் நான்காவது படித்து வருகிறார். நேற்று மாலை பாட்டி வீட்டுக்குஅருகே உள்ள கால்வாயில் பாட்டி அமுதாவும் யாழிசையும் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கால்வாயில் யாழிசை தண்ணீரில் மூழ்கினார்.
பாட்டி கண்ணெதிரே பேத்தி தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த பாட்டி அமுதா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, அதிகமான தண்ணீர் செல்வதால், காப்பாற்ற முடியவில்லையாம்.
இது குறித்து, விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று கால்வாயில் வரக்கூடிய தண்ணீரை நிறுத்த பொதுப்பணித்துறைக்கு தகவல் கொடுத்தார். தண்ணீர் நிறுத்தப்பட்டது.இதன் பின்னர், சோழவந்தான் தீயணைப்பு படையினர் கால்வாயில் மூழ்கி இருந்த யாழிசையை பிணமாக மீட்டனர். குளிக்கச் சென்ற சிறுமி பிணமாக கிடந்தது கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து, உசிலம்பட்டி டிஎஸ்பி விஜயகுமார், செக்கானூரணி இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கூறு ஆய்வுக்காக பிணத்தைஅனுப்பி வைத்தனர். பாட்டிவீட்டுக்கு வந்த பேத்தி தண்ணீரில் மூழ்கி இறந்த செய்தி அந்தக் கிராமத்தில், பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.