• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை…

BySeenu

Apr 22, 2026

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை மற்றும் கோவை குற்றாலம் அருவி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 3,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்கள் சுலபமாக வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆயுதம் ஏந்திய துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கோவை குற்றாலம் அருவி நாளை முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நேரத்தில் அனுமதியின்றி செல்ல முயற்சிக்கும் நபர்களுக்கு இந்திய வனச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையினர் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.