புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் அரசு மருத்துவமனை கட்டடம் ஒன்று திறப்பு விழாவிற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜெம் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் குறித்த செய்தி இப்போது தான் படித்தேன். அவர் மட்டும் தனி ஆளாக செய்து இருக்க முடியாது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெம் வீரமணி மீது 2025 இல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் 2024 இலே புகார் கொடுக்கப்பட்டு வழக்கு செய்யப்பட்டதாகவும் இரு வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்போதெல்லாம் விசாரணை ஏன் தள்ளிப் போய் என்பது குறித்து துறை ரீதியான முறையான விசாரணை வேண்டும்.
இப்போதிருக்கும் தமிழ்நாடு அரசாங்கம் அதை சரியான முறையில் கையாண்டு வருகிறது. எங்கள் கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவின் தலைவர் ஒருவர் ஜெம் வீரமணி மீது புகார் கொடுத்து இருக்கிறார் என்றால் கட்சி ரீதியாக கொடுக்கவில்லை தனிப்பட்ட முறையில் கொடுத்திருக்கிறார் என்றால் அது குறித்து அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். இந்த வழக்கில் டிபால்ட் ஆக காவல்துறை முறையாக விசாரணை செய்யட்டும். அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தெரிந்தால் பிறகு சிபிஐக்கு மாற்றலாம். எடுத்த எடுப்பிலேயே சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று சொல்வதற்கில்லை.
இன்றைக்கு இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயமும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. இப்போதைக்கு வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் அவர்களை தேர்தல் களத்தில் இறக்கி விட்டிருக்கக் கூடாது. அவர்களுக்கு பதிலாக தங்களது கட்சியில் உள்ள வேட்பாளர்களை ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்களை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது அந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளருக்குக் கொடுத்து இருக்கலாமே தவிர கட்சி மாறி வந்து இருப்பவர்களுக்கு சீட் கொடுத்திருக்கக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் கூறுகிறார்கள் என்றால் தமிழக அரசியல் இலக்கணப்படி தங்களது தலைவர்களை வானலாக புகழ்வது என்பது இயல்பானதாகும். நேற்று ஒருத்தர் கட்சி ஆரம்பித்தால் கூட அவரை வருங்கால முதல்வரே வருங்கால பிரதமரே என்று சொல்வார்கள். அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய ஒரு நடிகருக்கு கூட வருங்கால முதல்வரே என்று சொல்லித்தான் போய் மாலை போட்டார்கள். ஆனால் இந்திய அரசியலின் உண்மையான நிலவரம் என்ன? 272 எம்பி யார் ஆகிறார்களோ அவர்கள்தான் பிரதமராக ஆக முடியும். அது அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தெரிந்தவர்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அவர்களது கட்சியில் வானளாவிய அளவில் புகழ்கிறார்கள் என்றால் அரசியலில் உண்மை நிலவரம் மாறுவது கிடையாது.
இப்போது இருக்கும் தேர்தல் ஆணைய தலைமை ஒரு நாள் கூட நீடிக்கக் கூடாது அவர்களது செயல்பாடுகளில் எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை கிடையாது. இவர்கள் நடத்தும் தேர்தல்களில் நேர்மை இருக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாடு கேரளாவில் இந்த மோசடி செய்தார்களா என்று தெரியவில்லை ஆனால் மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சரியான வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் செய்து விட்டார்கள். தேர்தல் ஆணையர்கள் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் மீது 14 முறை முறையிட்டு இருக்கிறார்கள் ஆனால் அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
புதிதாக வாக்காளர் சேர்ப்பதில் ஃபோம் 6 என்ற பகுதியில் கேட்கக்கூடாத கேள்விகளை எல்லாம் கேட்டு வைத்திருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லவில்லை என்றால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது அப்படி வைத்திருக்கிறார்கள். உங்களது தாத்தா பாட்டி வாக்களித்து இருக்கிறார்களா என்று கேட்கிறார்கள். இப்படி கேட்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்திலேயே கிடையாது. யார் ஒரு குடிமகனோ குடிமகளோ 18 வயது பூர்த்தியானவர்கள் இருந்தால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும். அவர்களிடம் உங்கள் அப்பா அம்மா தாத்தா பாட்டி இவர்கள் எல்லாம் ஓட்டு போட்டார்கள் என்று கேள்வி கேட்கக்கூடாது. இந்த கேள்விகளுக்கும் அவர்களது வாக்களிக்கும் உரிமைக்கும் சம்பந்தமே கிடையாது.
சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு வாக்களிக்க வேண்டியவர்களை தேர்தல் ஆணையம் வாக்களிக்க விடாமல் செய்து இருக்கிறார்கள். முன்பு ஆங்காங்கே ஏராளமான அதிகாரிகள் இருந்து தங்களது பகுதி வாக்காளர்களை சரிபார்த்து அனுப்பினார்கள் ஆனால் இப்போது எங்கிருந்து கணக்கெடுத்தாலும் டெல்லியில் இருந்து ஓகே சொல்ல வேண்டிய நிலையில் இந்த வருடம் மாற்றி அமைத்து இருக்கிறார்கள். இது பெரிய பிழை. இது குறித்து எங்கள் தலைவர் ராகுல் காந்தி விரிவாக விளக்கி பேசியிருக்கிறார். அடுத்தபடியாக 29ஆம் தேதி நடைபெற இருக்கும் காரியக் கமிட்டி என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி மாவட்ட வாரியாக போராட்டங்கள் நடத்த இருக்கிறோம் மக்களிடம் எடுத்து சொல்ல இருக்கிறோம். இந்தத் தேர்தல் ஆணைய முடிவுகள் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் தியானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும். 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து உத்தவ் தாக்கரே புகார் செய்கிறார் என்றால் சுப்ரீம் கோர்ட் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். சரியான ஆவணங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் கொண்டு போய் தாக்கல் செய்ய வேண்டும். நாங்கள் பொறுப்பான அரசியல் கட்சியாக மக்கள் மன்றத்தில் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.

பவர் கட் பிரச்சனைக்கு டி வி கே அரசாங்கம் பொறுப்பே கிடையாது. பவர் எப்படி வருகிறது என்றால் முதலில் ஜெனரேஷன் பின்னர் டிஸ்ட்ரிபியூஷன். இது கடந்த 50 ஆண்டு காலமாக கவனித்திருக்கப்பட வேண்டிய விஷயம். முதலில் மின்சார வாரியத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் பவர் பிளான்ட் எல்லாம் பழைய பவர் பிளான்ட். கார் பழையது ஆகிவிட்டால் எப்படி வேகம் குறையுமோ அது மாதிரி தான் பவர் பிளான்டும். பவர் குறைபாட்டுக்கு இந்த அரசாங்கம் காரணம் இல்லை. ஆனால் அரசியல் இருப்பவர்கள் புரிந்து கொள்ளாத தன்மையில் இருக்கிறார்கள். அதிகார்கள் என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ அதை அப்படியே படிக்கிறார்கள். காற்று அடிக்கவில்லை கரண்ட் வரவில்லை என்பார்கள். பஞ்சாப் மாதிரி தமிழ்நாடு இல்லை என்பார்கள். இன்றைக்கு இருக்கும் என்ன சூழ்நிலையோ அதை நியாயப்படுத்தி தான் அதிகாரிகள் பேசுவார்கள்.
ஆட்சியாளர்களுக்கு அனுபவம் இருந்தால் அதிகாரிகள் சொல்வதை உதாசீனப்படுத்திவிட்டு இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையை வெள்ளை அறிக்கையாக கொடுங்கள் என்று கேட்பார்கள். இங்கு உள்ள மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டேன். வேறு எங்கும் டெங்கு இருக்கா என்பது எனக்கு தெரியாது என்று தனது பேட்டியை நிறைவு செய்தார்.




