• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே 7 பேர் எரித்துக் கொலை: மனைவி உள்பட 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை..,

ByKalamegam Viswanathan

Aug 19, 2026

மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே, கணவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை வீட்டிற்குள் வைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற வழக்கில், கணவர் கண்ணனின் மனைவி பரமேஸ்வரி உள்பட 3 பேருக்கு தலா 8 ஆயுள் தண்டனை விதித்து மதுரை 6-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேரையூர் அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்த வேலுவின் மகன் கண்ணன் (25). அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி (21) என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின்னர் கண்ணன் தனது மனைவி பரமேஸ்வரியை குடும்பத்துடன் சேர்த்து வாழ மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, பரமேஸ்வரி தனது உறவினர்களான முருகேஸ்வரி (40), ராஜபாண்டி (19) ஆகியோருடன் சேர்ந்து கண்ணனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.

2015 மே 20ஆம் தேதி அதிகாலை, கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி, ஜன்னல் வழியாக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் கண்ணன் (25), அவரது தந்தை வேலு (60), தாய் பேச்சியம்மாள் (55), சுகன்யா (35), சங்கீதா (17), சஞ்சித் (12), வினித் (10) ஆகிய 7 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சேடபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய டி.எஸ்.பி. கோமதி விசாரணை நடத்தினார். வழக்கில் கண்ணனின் மனைவி பரமேஸ்வரி, முருகேஸ்வரி மற்றும் ராஜபாண்டி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இவ்வழக்கு மதுரை 6-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், பொறுப்பு நீதிபதி உதயவேலவன் இன்று தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகள் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம், தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம், 7 ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ.35,000 அபராதம் விதித்தார்.

இதன்படி, மூன்று குற்றவாளிகளுக்கும் தனித்தனியாக 8 ஆயுள் தண்டனைகள், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.45,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் எரித்துக் கொல்லப்பட்ட 11 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.