• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பட்டாசு குடோன் உரிமையாளர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழப்பு.! ஒருவர் படுகாயத்துடன் மீட்பு..,

Byமுகமதி

May 30, 2026

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த பில்லமங்கலம் அருகே உள்ள பி‌.அழகாபுரி கிராமத்தில் பொன்னழகி நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பி. அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (எ) கணேசன்(48) திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வெடிக்கும் வானவெடி உள்ளிட்ட நாட்டு வெடிகளை தயாரிக்கும் குடோன் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று அந்தக் குடோனில் உரிமையாளர் கருப்பையா உட்பட ஐந்து பேர் பணிபுரிந்து வந்த நிலையில் மூன்று பேர் மதிய உணவு உண்ண தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு குடோனின் உரிமையாளர் கருப்பையா (எ) கணேசன் பில்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த பரமன் ஆகிய இருவர் மட்டுமே பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசு குடோன் தரைமட்டம் ஆகியுள்ளது. மேலும் பட்டாசு குடோன் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோன் உரிமையாளர் கருப்பையாவின் காரும் சேதம் அடைந்துள்ளது. மேலும் பயங்கர சத்தத்துடன் பட்டாசு குடோன் வெடித்து சிதறியதால் கிராம மக்கள் அங்கு குவியத் தொடங்கினர்.

இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் கருப்பையா (எ) கணேசன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது உடலில் உள்ள பாகங்கள் தனித்தனியாக எடுத்து செல்லப்பட்டது. மேலும் அவரது உடல் சில மீட்டர் தூரம் ஆங்காங்கே சிதறிக் கிடந்த நிலையில் அந்த உடல்கள் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் பில்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரமன்(50) படுகாயம் அடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் பட்டாசு குடோனில் பணிபுரிந்து வந்த மூன்று தொழிலாளர்களும் மதிய உணவு உண்ணச் சென்றதால் அவர்கள் இந்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். மேலும் வாடிக்கையாளர்கள் இருவர் பட்டாசு வாங்க வந்த நிலையில் அவர்களும் உயிர்த்தப்பினர்.

மேலும் இந்த வெடி விபத்து சம்பவம் நடந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற திருமயம் தீயணைப்புத் துறையினர் பட்டாசு குடோனில் பற்றிய தீயை தண்ணீர் பீச்சி அடித்தனர். மேலும் தரைமட்டமான பட்டாசு குடோன் ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் சம்பவ இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா, திருமயம் காவல்துறையினர், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் தற்போது வெடி விபத்துக்குள்ளான பட்டாசு குடோனுக்கு 2028 வரை உரிமம் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து சம்பவம் பி.அழகாபுரி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.