
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 31 டன் காய்கறிகள் விற்று தீர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை பல்வேறு பகுதியில் இருந்து நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களை விட இங்கு காய்கறிகள் குறைந்த அளவிற்கு விற்பனை செய்யப்படுவதால் இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.
தற்போது கொரோனா காலகட்டம் என்பதால், தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு சம்பத் நகரில் 113 கடைகளும், பெரியார் நகரில் 28 கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. காலை 6 மணிக்கு தொடங்கிய சந்தை 10 மணிக்குள் அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்தன.
ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையில் இன்று மட்டும் 23 டன் காய்கறிகள் விற்பனை ஆயின. பெரியார் நகரில் 8 டன் காய்கறிகள் விற்பனை ஆயின. மொத்தம் 31 டன் காய்கறிகள் விற்பனை ஆவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பந்த நகரில் இன்று மட்டும் ரூ.7 லட்சத்து 3 ஆயிரம், பெரியார் நகரில் ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் என மொத்தம் ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்று தீர்ந்தன.