

தென்காசி, மதுரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி – தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் மூலம் இரண்டரை மாதங்களில் 2 கோடி ரூபாய் வருமானம்-குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவுவதாலும், பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதாலும் தொடர்ந்து இயக்க பயணிகள் கோரிக்கை….
திருநெல்வேலியிலிருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட திருநெல்வேலி – தாம்பரம் மற்றும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்களுக்கு இரண்டரை மாதங்களில் 2 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.
திருநெல்வேலியில் காலியாக நிறுத்தி வைக்கப்படும் ரயில் பெட்டிகளை கொண்டு இந்த இரண்டு சிறப்பு ரயில்கள் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால் இந்த இரு சிறப்பு ரயில்களையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 17ம் தேதி முதல் ஜூன் 27 ம் தேதி வரை திருநெல்வேலி – தாம்பரம் ஞாயிற்றுக்கிழமைதோறும், தாம்பரம், திருநெல்வேலி திங்கள்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.
அதைப்போல ஏப்ரல் 21 முதல் ஜூன் 27 வரை வியாழக்கிழமைதோறும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம், வெள்ளிக்கிழமைதோறும் மேட்டுப்பாளையம் திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்த ரயில்கள் பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல் வழியாக கோடைகால சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே சிறப்பான வரவேற்பு இருந்தது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி இயங்கும்போது பாண்டியன் எக்ஸ்பிரஸ்க்கு நிழல் ரயிலாக இயங்கியதால் மதுரை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கியது. இந்த சிறப்பு ரயில்களுக்கான வருமானம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர்.டி.ஐ -யில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தென்னக ரயில்வே அளித்த பதிலில், பயணிகள் எண்ணிக்கை:
திருநெல்வேலி – தாம்பரம் ரயில் 9313 பயணிகளுடன் 65.77 லட்சம் வருமானமும், தாம்பரம் திருநெல்வேலி ரயில் 8940 பயணிகளுடன் 55.14 லட்சம் வருமானமும், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் 7814 பயணிகளுடன் 38 லட்சம் வருமானமும், மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ரயில் 8380 பயணிகளுடன் 42.14 லட்சம் வருமானமும் தந்துள்ளது.
இரண்டரை மாதங்களில் இரு மார்க்கங்களிலும் 10 சேவைகள் இயக்கப்பட்ட இந்த இரு வாராந்திர சிறப்பு ரயில்களையும் சேர்த்து மொத்தம் 34,447 பயணிகளுடன் 2.01 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
வருவாய் அதிகரித்துள்ள இந்த அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னை மற்றும் கோவை மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் இந்த இரு வாராந்திர சிறப்பு ரயில்களையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
