குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முகேஷ் அம்பானியின் பங்களாவை அலங்கரிக்க ஆந்திராவில் உள்ள நர்சரி ஒன்று 180 ஆண்டுகள் பழமையான இரண்டு ஆலிவ் மரங்களை அனுப்பியுள்ளது.
ஸ்பெயினில் இருந்து கொண்டுவரப்பட்ட 180 ஆண்டுகள் பழமையான இந்த ஆலிவ் மரங்கள், ஆந்திராவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. இவை நவம்பர் 24ஆம் தேதி அன்று, ஒரு டிரக்கில் ஏற்றப்பட்டு 5 நாள் பயணமாக குஜராத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இரண்டு ஆலிவ் மரங்களுக்காக அம்பானி போக்குவரத்து உட்பட சுமார் 85 லட்சம் ரூபாய் செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய கவுதமி நர்சரியின் உரிமையாளர் வீரபாபு, “ அம்பானி ஜாம்நகரில் ஒரு மிருகக்காட்சிசாலையை உருவாக்கி வருகிறார். மேலும் ஒரு முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்குகிறார். அவர்கள் தங்கள் சேகரிப்பில் சேர்க்க பல இனங்களைச் சேர்ந்த அரிய மரங்களைச் சேகரித்து வருகின்றனர். அதற்காகத்தான் இந்த ஆலிவ் மரங்களை அவர் வாங்கியுள்ளார்.

இந்த ஆலிவ் மரங்கள் ஒவ்வொன்றும் 2 டன் எடையுள்ளவை, இதன் வேர்கள் பூமியில் படர்ந்துள்ளதால், அவை மூடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்த மரங்களை டிரக்கில் ஏற்றுவதற்கு 25 பேர் கொண்ட குழு மற்றும் ஹைட்ராலிக் கிரேன்கள் தேவைப்பட்டன. மரங்களின் அதிக எடை மற்றும் உடையக்கூடிய தன்மை காரணமாக இந்த ட்ரக் வாகனம் மணிக்கு 30- 40 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும், எனவே இது ஜாம்நகரை அடைய சுமார் 5 நாட்கள் ஆகும்.
புனிதமாக கருதப்படும் ஆலிவ் மரம் செழிப்பைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது, இந்த மரம் 1000 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது” என்று கூறினார்.