தைப்பொங்கலை முன்னிட்டு 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இத்தொகுப்பில் , பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி , வெல்லம் , முந்திரி , திராட்சை , ஏலக்காய் , பாசிப்பருப்பு , நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள் , மிளகாய் தூள் , மல்லித்தூள் , கடுகு , சீரகம் , மிளகு , புளி கடலைப் பருப்பு , உளுத்தம் பருப்பு , ரவை , கோதுமை மாவு , உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை ( 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ), பயனாளி ஒருவருக்கு ரூ.505 என்ற வீதத்தில் மொத்தம் ரூ.1,088.17 கோடி தொகையை ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில், இந்த பொங்கல் தொகுப்புடன் பயனாளிகள் அனைவருக்கும் கூடுதலாக கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு கரும்பிற்கு ரூ.33 வீதம் அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கும் வகையில் ரூ.71.10 கோடி தொகையை அரசு ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின் வெளியிட்டு உள்ளார்.