காரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளைக் கட்டுப்படுத்த மாநில போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சத்தீஸ்கரின் காரியாபந்த் மாவட்டத்தில் ஒடிசா எல்லையையொட்டிய வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நேற்று இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது.
இந்த என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு கோப்ரா வீரர் காயமடைந்தார் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ரூ.1 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட்டும் அடக்கம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையில் மாவட்ட ரிசர்வ் படை (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), சத்தீஸ்கரின் கோப்ரா மற்றும் ஒடிசாவின் சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்ஒஜி) ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழுவினர் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், ஐஇடி வெடிமருந்துகள், தானியங்கித் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.