கர்நாடகாவில் காய்கறி லாரி கவிழ்ந்து 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிக்கொண்டு அதிகாலை நேரத்தில் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அந்த லாரியில் மொத்தம் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த லாரி யல்லாபூர் என்ற இடத்தில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த போது மற்றொரு வாகனத்திற்கு வழி விட முயன்ற போது லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த 50 மீட்டர் ஆழமான சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
அவர்களை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு விபத்து
இதற்கிடையில், கர்நாடகாவின் ராய்ச்சூரில் வாகனம் கவிழ்ந்ததில் நான்கு பேர் இறந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் சிந்தனூரில் நடந்தது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிந்தனூர் போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள யல்லாபூர் மற்றும் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிந்தனூரில் நடந்த இரண்டு தனித்தனி விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.