• Wed. Apr 24th, 2024

11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு! – அதிமுகவின் வெற்றி! – விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசியை இன்று மூன்றாவது முறையாக நான் மருத்துவர் என்ற முறையில் செலுத்தி கொண்டேன்! மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை நான் சட்டமன்றத்தில் அழுத்தமாக வலியுறுத்தினேன், தற்போது பாரத பிரதமர் மற்றும் ஒன்றிய அரசு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அனுமதி அளித்து இருப்பது வரவேற்கத்தக்கது, ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடிய இன்றைய சூழலில் முகக்கவசமும் தடுப்பூசியும் அவசியமான ஒன்றாக உள்ளது.

தடுப்பூசி விஷயத்தில் அரசு 100% இலக்கை எட்ட வேண்டும்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியமான ஒன்று. குறிப்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பு அரசுக்கு மிகவும் அவசியம். கொரோனா வீரியம் குறித்து 2 அலையிலேயே நாம் பார்த்துவிட்டோம். இந்த காலகட்டத்தில் இன்னும் கூடுதல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், அரசு கூடுதல் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரியை நேற்று தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இது அதிமுக அரசுக்கு இடைத்த மகத்தான மைல்கல், 1650 சீட் தமிழகத்துக்கு வர வேண்டும், இன்னும் 200 மருத்துவ இடங்களையும் மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுப் பெற வேண்டும்,

இராமநாதபுரம், ஊட்டி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டது எனக்கு தனிப்பட்ட முறையில் மனநிறைவைத் தருகிறது, வரும் காலத்தில் உலக வங்கி நிதி மூலம் செயல்படும் திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி முடிக்கும் போது தமிழக சுகாதாரத் துறையில் சிகரத்தின் உச்சத்தில் இருக்கும், மக்களின் வாழ்வு ரொம்ப முக்கியம். பொருளாதாரம் ரொம்ப முக்கியம். அதனால் ஊரடங்கு விஷயத்தில் அரசு சமநிலை தன்மையை தான் கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் உள்ளது, இப்போது இருக்கக்கூடிய நடை முறைகளை முறையாக கடைபிடித்தாலே பாதிப்புகளை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து. 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன், ஒரே நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால் நாம் இந்த விஷயத்தில் உற்று நோக்கி கவனமாக முடிவெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *