

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அறிவாள், கத்தி, போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கடுக்கரை என்னும் ஊரை சேர்ந்தவர் செல்லம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. நீண்ட நாட்களாக இருந்து வரும் இந்த தகராறு காரணமாக அவ்வப்போது ஒரு கும்பல் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்று இந்த கும்பல் இளைஞர் ஒருவரை ஓட ஓட 18 இடங்களில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி உள்ளதாகவும் இதுகுறித்து போலீசில் புகார் செய்தோம்.இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள முக்கிய குற்றவாளியான இருவர் போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பிறகு அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் அவ்வப்போது வந்து மிரட்டலில் ஈடுபட்டு வருவதாக செல்லம் குடும்பத்துடன் இன்று நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து மனு அளித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரவுடிகள் அட்டகாசம் தலைவிரித்து வரும் நிலையில் இதுபோன்று நடந்து வரும் சம்பவங்களை கட்டுப்படுத்தி பொது மக்களை நிம்மதியாக வாழ வழி வகை செய்யவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.