• Fri. Apr 19th, 2024

ரெய்க்யவிக் ஓபன் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றார் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா..

ரெய்க்யவிக் (ஐஸ்லாந்து): இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, ‘ரெய்க்யவிக் ஓபன்’ சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 9 ரவுண்டுகளில் 7.5 புள்ளிகளை பெற்றார் அவர்.

சுமார் 245 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடத்தப்பட்டது. இறுதி சுற்றுக்கு முன்னதாக மேக்ஸ் வார்மர்டாம், ஆண்டர்சன், பிரக்ஞானந்தா ஆகியோர் 6.5 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தனர். அதே போல குகேஷ், அபிமன்யு மிஸ்ரா மாதிரியான வீரர்களும் புள்ளிகளில் நல்ல முன்னிலை பெற்றிருந்தனர். அதனால் இந்த முறை வெற்றியாளர் யார் என்பதில் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

இருந்தாலும் இறுதிச்சுற்றில் சக இந்திய வீரர் குகேஷுக்கு எதிராக அற்புதமான நகர்வுகளை முன்னெடுத்து வைத்தார் பிரக்ஞானந்தா. அதன் பலனாக 1 புள்ளியை தனது கணக்கில் சேர்த்தார். ஒட்டுமொத்தமாக 9 ரவுண்டுகளில் 7.5 புள்ளிகளை பெற்று பட்டத்தையும் வென்றார்.

மேக்ஸ் வார்மர்டாம், ஆண்டர்சன் உட்பட நான்கு வீரர்கள் 7 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். 12 வயது மற்றும் 4 மாதங்களே ஆன அமெரிக்க வீரர் அபிமன்யு மிஸ்ராவும் 7 புள்ளிகளை பெற்றிருந்தார்.

இந்திய வீரர்கள் குகேஷ் 16-வது இடமும், தானியா 24-வது இடமும், அதிபன் 36-வது இடமும், ஸோஹம் தாஸ் 48-வது இடமும் பிடித்திருந்தனர். அண்மையில் சதுரங்க உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை ஆன்லைனில் நடைபெற்ற போட்டியில் வீழ்த்தி அசத்தியிருந்தார் பிரக்ஞானந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *