• Fri. Jan 17th, 2025

கணிதத்தை 15 நிமிடத்தில் செய்து உலக சாதனை

Byகுமார்

Dec 8, 2024

மதுரையில் 250 மாணவர்கள் எண் கணிதத்தில் 5 முதல் 8 இலக்கங்கள் கொண்ட கணிதத்தை 15 நிமிடத்தில் செய்து உலக சாதனை புரிந்து சான்றிதழ்களை மாணாக்கர்கள் அள்ளிச் சென்றனர்.

மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாண்டுகுடி ஸ்ரீ லெட்சுமி நாராயணா வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கணிதத்தில் ஆர்வமுள்ள 250 மாணவ, மாணவிகளுக்கான எண் கணிதத்தில் 5 மற்றும் 8 இலக்கங்கள் கொண்ட கணிதத்தை 15 நிமிடத்தில் பூர்த்தி செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒன்றும், 6 முதல் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண் கணிதத்தில் வினாக்கள் வழங்கப்பட்டது. ஒரே அறையில் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு வழங்கப்பட்ட என் கணித வினாக்களுக்கு பதில் அளித்தனர். இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 8 நிமிடம் முதல் 10 நிமிடத்திற்குள் எண் கணிதத்தை பூர்த்தி செய்து சாதனை புரிந்தனர்.

மேலும், 5ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர் ஒருவர் 5 நிமிடத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட எண் கணித இலக்கங்களை பூர்த்தி செய்து சாதனை புரிந்தது அங்கிருந்த அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றார். இந்நிகழ்ச்சியில் விருந்தினராக துணை ஆட்சியர் திருமலை, திரைப்பட நடிகர் விஜய் விஷ்வா, வழக்கறிஞர் மற்றும்
கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் நிறுவனர் M.ஷேக் முஹம்மது, Chief Editor டாக்டர் ஜாகிர் உசேன் மற்றும் பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் உலக சாதனை புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.