
புதுச்சேரி அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த செட்டிகுளம் பகுதியில் இருந்த 18 வீடுகளை கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம், அனைத்து வீடுகளையும் ஜேசிபி இயந்திரங்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படாததால் அகற்றப்பட்ட வீடுகளில் இருந்த 10 குடும்பத்தினர் அதே பகுதியில் திறந்தவெளியில் இரவு பகலாக அகதிகள் போல் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் சாலை ஓரத்திலே அடுப்பு மூட்டி உணவு சமைத்து கடுமையான மழை மற்றும் வெயிலுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 35 நாட்களாக வீடுகள் இல்லாமல் சாலை ஓரத்திலே வசித்து வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அடிப்படை வசதிகளான கழிவறை, சுத்தமான குடிநீர், மற்றும் தூங்குவதற்கு தேவையான இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பலமுறை அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கும் ஆனால் மாவட்ட நிர்வாகமும், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளவில்லை,
இந்த நிலையில் கடந்த 35 நாட்களாக அவதிப்படும் மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் அந்தப் பகுதியில் உள்ள அம்மனிடம் மடிப் பிச்சை ஏந்தி பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கையை கண்ணீர் மல்க கூறி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டத்திற்கு அரியாங்குப்பம் அதிமுக இளைஞரணி பொறுப்பாளர் தமிழ்வேந்தன் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் உடனடியாக தேவையான நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
காற்று மழை வெயில் என கடந்த 35 நாட்களாக அவதிப்படும் மக்களை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அம்மனிடம் மடிப் பிச்சை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
