புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழா நாளை கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. திருவிழாவில் மத்திய அமைச்சர்,துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான விளம்பரங்கள் புதுச்சேரி நகர பகுதி மற்றும் கிராம பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கிய சந்திப்புகளுக்கான அஜந்தா தியேட்டர் சிக்னல், காமராஜர் சிலை சந்திப்பு, அண்ணா சிலை,இந்திரா காந்தி சிலை,ராஜீவ் காந்தி சிலை சதுக்கங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் முக்கிய சந்திப்புகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பேனர்களில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. இதற்கு புதுச்சேரியில் இருக்கக்கூடிய எதிர்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ள புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழாவுக்கு தமிழ் முழுவதும் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து,தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை சிக்னல், அஜந்தா சிக்னல், இந்திரா காந்தி சிலை சதுக்கம், ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை கருப்பு மை பூசி அழித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால் புதுச்சேரியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என ரங்கசாமி உத்தரவிட்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.