சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு இருந்தும் அதிகாரிகளின் தவறினால் மாணவர்கள் தோல்வியடைந்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றச்சாட்டு.

புதுச்சேரி மாநிலத்தில் பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு தேர்வில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பாக பத்தாம் வகுப்பில் 130 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும், இதற்கு அதிகாரிகளில் தவறே காரணம் என முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
நடப்பு கல்வி ஆண்டில் பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுடன் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மாவட்டத் துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டனர். தொடர்ந்து மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக துணை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் "சிபிஎஸ்சி பாடத்திட்ட விதிமுறைகள் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியவில்லை எனவும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றுப் பாடமாக ஏதாவது ஒரு பாடத்தை எடுத்து அதில் பெரும் மதிப்பெண்களின் சராசரியை கொண்டு தோல்வி அடைந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியும் எனவும் இதை புதுச்சேரி, மாகி,யானம் பகுதிகளில் செய்திருப்பதாகவும் காரைக்காலில் மட்டும் செய்ய தவறி இருப்பதாகவும் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது மாணவர்களின் முக்கியமான கட்டம் எனவும் இந்தத் தேர்வுகளில் தோல்வி அடைவது என்பது மாணவர்களுக்கும் அந்த குடும்பத்திற்கும் மிகப்பெரிய மன உளைச்சல் எனவும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு இருந்தும் தவறு செய்தது கல்வித்துறை அதிகாரிகள் எனவும் அதிகாரிகள் மீதும் கல்வித் துறை அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தோல்வி அடைந்த மாணவர்கள் தேர்வு எழுத தேவையான கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.