• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

‘அயன்’ படப்பாணியில் ரூ.10 கோடி போதைப்பொருள் கடத்திய பெண்!

ByP.Kavitha Kumar

Mar 4, 2025

‘அயன்’ படப்பாணியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அலர்ட் ஆனார்கள். பிரேசிலில் உள்ள சாவோ பாலோ நகரில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த
விமானத்தில் இருந்த பயணிகளிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதனை செய்த போது அவரது உடைமைகளில் எந்த பொருளும் சிக்கவில்லை. ஆனாலும், அவர் மீது எழுந்த சந்தேகத்தால், தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த பெண், போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு இனிமா கொடுத்து வயிற்றில் இருந்த 100 கேப்சூல்களை வெளியே எடுத்தனர். அந்த கேப்சூல்களில் 1,096 கிராம் எடையுள்ள கொகைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.10 கோடியே 96 லட்சம் ஆகும்.

கடந்த 2009-ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘அயன்’ படத்தில் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த படப்பாணியில் பிரேசில் பெண், போதைப்பொருள் கடத்தி வந்த சம்பவம் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கடத்தி வந்த போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.