செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில், அரசு பள்ளி ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் அதிகளவில் ஈடுபடுத்துவதால் மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 60 ஆசிரியர்களில் 56 பேரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அனுப்பியுள்ளதாகவும், இதனால் பள்ளியில் கண்பார்வை குறைபாடு கொண்ட நான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக, குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கு. தியாகராஜன், தாம்பரம் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், மாணவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஒரு பள்ளியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்களை ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு பணிக்கு அனுப்புவதால் கற்பித்தல் பணியும், மாணவர் கண்காணிப்பும் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறினார்.
மேலும், ஒரு பள்ளியில் பல பாட ஆசிரியர்கள் இருக்கும் நிலையில், சரிவிகிதமாக பணிகளை ஒதுக்காமல், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்களையே அழுத்தம் கொடுத்து அனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையை கண்டித்து ஆசிரியர்கள் மட்டுமின்றி ஜாக்டோ-ஜியோ அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
ஏற்கனவே தேர்வுப் பணி, தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவதால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், இதன் நேரடி தாக்கம் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தில் பிரதிபலிக்கும் என்றும் கு. தியாகராஜன் தெரிவித்தார்.
கல்வியில் ஏற்கனவே பின்தங்கியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், இந்த நிலை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கவலை தெரிவித்தார்.





