

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காலையில் கோயில் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஆண்டு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் வழிபட வருகின்றனர். இந்த கோயில் தினசரி காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பக்தர்கள் கூட்டம் காலை நேரத்தில் அதிகமாக இருப்பதால், தரிசன நேரம் காலை 6 மணிக்கே மாற்றப்பட்டுள்ளது. இந்த நேரமாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் 6.30 மணி முதல் 11.50 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் ராஜபோக ஆரத்திக்காக 12 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் பகல் 1 மணி முதல் மாலை 6.50 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். 7 மணிக்கு சந்தியா ஆரத்தி வழிபாடு நடைபெறும். பின்னர் இரவு 9.45 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதைத்தொடர்ந்து 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

