• Wed. Nov 6th, 2024

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா..?

Byவிஷா

Apr 16, 2022

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்று மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் அச்சத்துடனும், குழப்பத்துடனும் இருந்து வருவதுதுதான் தற்போதைய பரபரப்பே!
கொரோனா மூன்றாவது அலை முடிந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது பரவத் தொடங்கியிருக்கும் புதிய வகை தொற்றால் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒமைக்ரான் எக்ஸ்இ மற்றும் பிஏ.2 வகை திரிபுகள் அதிவேகமாக பரவுகின்றன.
டெல்லியில் கொரோனா பரவல் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் இந்தியாவில் மொத்தமாக 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் புதிதாக 325 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 3இல் ஒரு பங்கு தொற்று பாதிப்பு டெல்லியில் பதிவாகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்று பரவல் 0.57 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் தற்போது அது 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 48 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் 574 பேர் வீட்டுத் தனிமையில் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பள்ளிகள் மூடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். “கல்வியில் இடையூறு ஏற்படுத்த அரசு விரும்பவில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கல்வி நிலையங்களை தொடர்ந்து இயங்கச் செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது. எனவே பள்ளிகள் மூடப்படுவது என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும். தேவையெனில், பாதி அளவில் மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் எக்ஸ்இ மற்றும் பிஏ.2 தான் தொற்று அதிகரிப்பதற்கு காரணம் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் கொரோனாவின் புதிய திரிபுகள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. தென்கொரியாவில் தினமும் 1.5 லட்சத்துக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் உலக நாடுகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளன. இதன் தாக்கம் இந்தியாவில் மிக விரைவில் உணரப்படும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *