

தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ் புத்தாண்டு, விஷ_ பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகளால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்த்து நெரிசல் இன்றி பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரயில்களில் ஏப்.12,13,14,15 ஆகிய 4 நாள்களுக்கு கூடுதல் பெட்டிகள் சேர்த்து இயக்கப்பட்டன. இதனால், பல்வேறு ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு உறுதியாகி, மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனர்.
கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்ட ரயில்கள் விவரம்: ராமேசுவரம்-சென்னை எழும்பூருக்கு ஏப்,18,19, 20 தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (22662), மங்களூரு-சென்னை எழும்பூருக்கு ஏப்.17-இல் இயக்கப்படும் விரைவு ரயில் (16160), சென்னை எழும்பூர்-காரைக்காலுக்கு ஏப்.17-இல் இயக்கப்படும் விரைவு ரயில் (16175), காரைக்கால்-சென்னை எழும்பூருக்கு ஏப்.16, 18 தேதிகளில் இயக்கப்படும் விரைவுரயில் (16176), தாம்பரம்-நாகர்கோவிலுக்கு ஏப்.17-இல் இயக்கப்படும் விரைவு ரயில் (22657), நாகர்கோவில்-தாம்பரத்துக்கு ஏப்ரல் 18-இல் விரைவு ரயில் (22658), மதுரை-சென்னை சென்ட்ரலுக்கு ஏப்ரல் 17-இல் இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் (20602) ஆகியவற்றில் தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஏப்.20 வரை ஒரு பெட்டி கூடுதலாக சேர்த்து இயக்கப்படும் ரயில்கள்: சென்னை எழும்பூர்-கொல்லம் விரைவு ரயில்(16723), சென்னை எழும்பூர்-ராமேசுவரம் விரைவு ரயில்(22661), சென்னை எழும்பூர்-ராமேசுவரம்-சென்னை எழும்பூர்(16851-16852), தஞ்சாவூர்-சென்னை எழும்பூர்-தஞ்சாவூர்(16866-16865), சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல்(12695-12696) உள்பட 12 விரைவு ரயில்களில் ஏப்.20-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைத்து இயக்கப்படவுள்ளது.
ஏப்.21 வரை கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்ட ரயில்கள்: கொல்லம்-சென்னை எழும்பூர் விரைவு ரயில்(16724), குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில்(16128) உள்பட 5 ரயில்களில் ஏப்.21 வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

