• Sat. Apr 20th, 2024

எட்டாக்கனியாகும் எய்ம்ஸ் மருத்துவமனை!

Byகுமார்

Jan 28, 2022

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் வருகின்ற 2023ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2026ஆம் ஆண்டு நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயனடையும் நோக்கில் இந்திய ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டு, பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி முடிவானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வெளியானது. மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலங்கள் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டன.

இதே காலகட்டத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், ‘புலி வருது… புலி வருது..’ கதையாக மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் விடிவு காலம் பிறக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமன்றி, அடுத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான நிதிக்காக ஜப்பானைச் சேர்ந்த ஜைகா என்ற அமைப்புடன் இந்திய அரசால் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மருத்துவமனைக்கு ரூ.1977.80 கோடிகள் என புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகையில் ரூ.1627.70 கோடியை ஜைகா நிறுவனம் மூலமாகவும் மீதமுள்ள தொகை இந்திய ஒன்றிய அரசாலும் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திட்ட அமலாக்கக் குழுவும் அதற்கான பதவிகளும் உருவாக்கப்பட்டன.

இந்தியாவில் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 6 மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 16 மருத்துவமனைகளில் பல மாநிலங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எய்ம்ஸ் குறித்த மத்திய அரசின் பரிந்துரைகள் குறித்து முடிவெடுப்பதற்கான கூட்டம் கடந்தாண்டு ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்றது. அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக தற்காலிகமாக மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் முதற்கட்டமாக 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்காக இந்திய ஒன்றிய அரசிடம் பரிந்துரையும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜப்பான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு மார்ச் 31இல் இறுதியாகும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒன்றிய அரசின் சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தும்கூட, இதுவரை மதுரை தோப்பூரில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதைத் தவிர வேறு எந்தவிதமான கட்டுமானப்பணிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து அவ்வப்போது ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், அதுகுறித்து முழுமையான வடிவம் குறித்து குழப்பமான நிலையே நீடித்து வந்தது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிர்வாக அளவிலான கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் வருகின்ற 2023-ஆம் ஆண்டு தொடங்கி 2026-ஆம் ஆண்டுதான் நிறைவடையும் என அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *