அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் செய்ய வேண்டிய பணியை தாமே இழுத்துப் போட்டு செய்துகொண்டிருப்பது தான் அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் கடந்த மூன்று நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார் ஓ.பி.எஸ்.
தேனி மாவட்ட அதிமுக செயலாளராக சையது கான் என்பவர் உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு இவருக்கு ஏன் இந்த வேலை என விமர்சிக்கின்றனர் அவரது எதிர்கோஷ்டியினர்.
தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் தேர்வு பணி விறுவிறுப்படைந்துள்ளது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள அதிமுகவினரிடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேர்காணல் நடத்தி வருகிறார்.
பொதுவாக இது போன்ற பணிகளை, குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் தேர்வு படலத்தை மாவட்டச் செயலாளராக இருப்பவர்கள் தான் செய்வார்கள். ஒரு கட்சியின் உச்சபட்ச பதவியில் இருக்கக்கூடிய ஓ.பி.எஸ்., சொந்த மாவட்டம் என்பதற்காக குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் மட்டும் இவ்வாறு நேர்காணல் நடத்துவது அவர் மீதான இமேஜை கேள்விகுறியாக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் எல்லாம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பவர்ஃபுல்லாக வலம் வரும் சூழலில், தேனி மாவட்ட அதிமுக செயலாளர் டம்மியாக நியமிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருக்கக் கூடிய இந்த சூழலில், கூட்டணிக் கட்சியான பாஜகவுடன் இடப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் பணிகளை சென்னையில் முகாமிட்டு முடுக்கிவிடுவதை விடுத்து, ஊரில் அமர்ந்து பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் நேர்காணல் நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.
ஒரு பக்கம் தனது மகனும் தேனி மக்களவை தொகுதி உறுப்பினருமான ரவீந்தரநாத்தை அமர வைத்த ஓ.பி.எஸ்., தனது மற்றொரு புறம் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கானை அமர வைத்துக்கொண்டார். இதனிடையே ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக வலிமையான வேட்பாளர்களை களமிறக்கவே ஓ.பி.எஸ். நேரடியாக இந்த நேர்காணலை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.