• Fri. Apr 26th, 2024

எதற்காக பத்திரிகையாளர்களை பார்த்து ‘Oh My God’ சொன்னார் மோடி?

வெளிநாட்டில் பத்திரிகையாளர்களை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சி “ஓ மை காட்” (oh my God) எனக் கூறியதாக ஒரு வீடியோ கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வரும் நிலையில் அதன் முழு வீடியோ வெளியாகி உண்மை தெரியவந்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இந்தியா திரும்பினார். இதற்கிடையே, ஜெர்மனியில் கடந்த 2-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி ஒரு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அந்த மாநாடு முடிந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியே வந்ததும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்தனர்.

இதனை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, “ஓ மை காட்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக செல்வது போல ஒரு வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது. “பத்திரிகையாளர்களை பார்த்து மோடி பயப்படுகிறார்”; “பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாததால் மோடி அவர்களை தவிர்க்கிறார்” என எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தின் முழு வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில், அரங்கை விட்டு வெளியே வரும் பிரதமர் நரேந்திர மோடியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வியெழுப்ப தொடங்குகின்றனர். அப்போது, அவர்களை பார்த்து மோடி, “நீங்கள் ஏன் உள்ளே வரவில்லை” எனக் கேட்கிறார். அதற்கு பத்திரிகையாளர்கள், “எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை” என்கின்றனர். இந்த பதிலை கேட்டதும், “ஓ மை காட்” எனக் கூறும் மோடி, “இதுகுறித்து நான் விசாரிக்கிறேன். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.இந்த வீடியோவை சிலர் எடிட் செய்து, பத்திரிகையாளர்களை பார்த்து மோடி பயப்படுவது போல மாற்றி வெளியிட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், இந்த விவகாரம் குறித்து பாஜக இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *