• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

யார் இடமா இருந்தா என்ன?பணம் கொடு-பட்டா மாத்திக்க!

Byதரணி

Oct 15, 2025

மோசடி அதிகாரியை காப்பாற்றும் உயரதிகாரிகள்!

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர்  சசிகுமார் அண்மையில் திருவோணம் தாலுகா உட்பட்ட பகுதிகளில் ஒட்டிய போஸ்டரும், போராட்ட அறிவிப்பும் அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன காரணம் அவரிடமே பேசினோம்.

 அவர் தெரிவித்ததாவது:

“நான் திருவோணம் தாலுகாவுக்கு உட்பட்ட நெய்வேலி தென்பாதி கிராமத்தில் வசிக்கிறேன்.  என்  வீட்டின் அருகாமையில் வீரப்பன் என்பவர் குடியிருக்கிறார்.  அவரது அப்பா ராமன் என்பவர் இறந்து சுமார் 7 ஆண்டுகளுக்கு  மேலாகிறது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் என் வீட்டின்  கணினி சிட்டா எடுத்து பார்க்கும் பொழுது எனது இடம் இறந்து போன ராமன் என்பவருக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளது தெரிந்து அதிர்ந்துபோனேன்.

விசாரித்த பொழுது கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் மதியழகன் ஆகியோருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு மாற்றப்பட்டது என்பதை கண்டறிந்தேன்.

உடனடியாக திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, மண்டல துணை வட்டாட்சியர் மதியழகன் ஆகியோரிடம் முறையிட்டேன். அவர்கள் கொஞ்சம் கூட என்னை மதிக்கவில்லை.

எனவே பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என சுவரொட்டிகள் ஒட்டி, உண்ணாவிரதத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன்.

இந்த தகவல் அறிந்த கோட்டாட்சியர் சங்கர் உடனடியாக என்னை அழைத்து விசாரணை மேற்கொண்டார். எனது இடத்திற்கான அனைத்து ஆவணங்களையும் அவரிடம் கொடுத்தேன். அவர் செய்த விசாரணையில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் பழனிவேலை சஸ்பெண்ட் செய்தார்.  துணை தாசில்தாரை டிரான்ஸ்பர் செய்தார்கள் என தகவல் வந்தது.

உறவினர்கள் மற்றும் ஊர்காரர்களிடம் விசாரித்த பொழுது இந்த வி.ஏ.ஓ. இதே போன்று பல போலியான பட்டா மாறுதல் செய்திருப்பது தெரியவந்தது.

ஊரில் யாருடைய இடம் புழக்கத்தில் இல்லாமல் தரிசாக கிடந்தாலும் அந்த இடத்தை தன் கவனத்திற்கு கொண்டு வருபவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பட்டா மாறுதல் செய்து கொடுத்திருப்பது தெரியவந்தது.

எனது ஊரைச் சேர்ந்த ரங்கன் செட்டியார்  மகன் கருப்பனுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம், எனது  பெரிய தம்பி மகன் முத்துவிற்கு சொந்தமான இடம் என பல இடங்களில் இதேபோல உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பட்டா மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுமார் 60க்கும் மேற்பட்டவர்களுடைய ஆவணங்களை எடுத்து ஆய்வு செய்து கொண்டுள்ளேன். இவை அனைத்தும் மோசடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று சந்தேகமாக உள்ளது.  

ஆகவே இதை உரிய விசாரணை செய்து மாவட்ட ஆட்சித் தலைவர், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டாட்சியர் மதியழகன், அவருக்கு துணையாக செயல்பட்ட அனைத்து அதிகாரிகளையும் நீக்க வேண்டும்.

அப்படி  செய்யவில்லை என்றால் எங்களது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில தலைவரின் அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டத்தை அப்பாவி மக்களை ஒன்றிணைத்து ஆயிரத்து மேற்பட்டவர்களுடன் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அல்லது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முன்பு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவேன்” என்று எச்சரித்தார்.  

இந்த விவகாரம் தொடர்பாக திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தியிடம் நமது அரசியல் டுடே  சார்பாக பேசினோம்.

“சார் நான்  சப்டிவிஷன்மட்டும் தான் பார்க்க முடியும்.  பட்டா மாறுதல் தொடர்பாக  கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்தான் பார்த்துக் கொள்வார்கள் இது சம்பந்தமாக எனக்கு ஏதும் தெரியாது” என தெரிவித்தார்.

மண்டல துணை வட்டாட்சியர் மதியழகனை பலத்த முயற்சிக்குப் பின் போனில் பிடித்து சசிகுமாரின் புகார் பற்றிக் கேட்டோம்.

“அப்படியா? உங்களிடம் ஆதாரம் இருந்தால் நேரடியாக எடுத்து வாருங்கள். நாம் உட்கார்ந்து சமரசமாக பேசி ஒரு தீர்வு காண்போம்”  என நம்மிடம் ரொம்ப கூலாக பேசினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் சங்கரிடம் நமது அரசியல் டுடே சார்பாக பேசினோம்.

“சசிகுமார் கொடுத்த புகார் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பழனிவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  அதேபோன்று மண்டல துணை தாசில்தார் மதியழகன் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என பதிலளித்தார்.

பட்டா மோசடிப் புகாருக்கு உள்ளான மண்டல துணை தாசில்தார் மதியழகன் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் தெரியுமா?

டிரான்ஸ்பர் என்ற பெயரில் அதே தாலுகா அலுவலகத்தில் எலக்ஷன் தாசில்தராக நியமித்துள்ளனர். இது யாரை ஏமாற்றும் வேலை?

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயன்றோம். போனில் அவர் பிசியாக இருந்ததால், கலெக்டரின் வாட்ஸ் அப் நம்பருக்கு இந்த விவகாரம் பற்றி மெசேஜ் அனுப்பினோம்.

இதை பார்த்த மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இது தொடர்பாக ஐ வில் செக் என தெரிவித்திருந்தார்.

செக் செய்து, மோசடி அதிகாரிகளுக்கு செக் வையுங்கள் மேடம்!