• Fri. Nov 8th, 2024

வெளுத்து வாங்கிய கனமழை

Byவிஷா

Oct 14, 2024

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே, கோவை, மதுரை, தென்காசிய ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மணிநகர ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் மூழ்கிய காரில் சிக்கிய இருவரை காப்பாற்றிய காவலர் தங்கமுத்து மற்றும் அப்பகுதியை சேர்ந்த கார்த்தி, சந்திரசேகரின் செயலை தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் வெகுவாக பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெய்த கனமழை காரணமாக சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் உள்ள பிரகார வீதியில் மழை நீர் தேங்கியது. கோவில் பிரகாரத்தை தண்ணீர் சூழ்ந்து நின்றதால் சாமி கும்பிட வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், பேரூர், மாதம்பட்டி, பூலுப்பட்டி, ஆலந்துறை, தொண்டாமுத்தூர், விராலியூர், நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு கன மழை பெய்தது. சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியின் முதல் தடுப்பணையான சித்தர்சாவடி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று பன்னிமடை தடுப்பணை நிறைந்து தண்ணீர் கணுவாய் தடுப்பணை நோக்கி வழிந்து ஓடுகிறது.
கோவை, நல்லாம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட அருணா நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். செல்வசிந்தாமணி குளத்தில் கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான துத்திப்பட்டு, பாங்கி ஷாப், சின்ன வரிகம், பெரிய வரிகம், தேவலாபுரம், கன்னிகாபுரம், வீரவர் கோவில், வீராங்குப்பம், கரும்பூர், சான்றோர் குப்பத்தில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மழைநீருடன் கழிவுநீர் ஆங்காங்கே சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *