சீன இறக்குமதி லைட்டர்களால் தீப்பெட்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப் படுவதாக சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவு வர்த்தக இயக்குநரகம் நேற்று உத்தரவு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பை வழங்கும் முக்கிய தொழிலான தீப்பெட்டி தொழில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை பிளாஸ்டிக் லைட்டர்களால் பாதிப்பை சந்தித்து வந்தது. எனவே, பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், லைட்டர் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதன்படி, தரநிலை கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் மட்டுமே லைட்டர்கள் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, தரநிலை ஆணையத்தின் முத்திரை இல்லாத லைட்டர்களை இந்தியாவில் இனி விற்பனை செய்ய முடியாது.
சீனாவில் இருந்து இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர் மற்றும் லைட்டர் உற்பத்தி பாகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.