• Fri. Apr 26th, 2024

என்ன சொல்கிறது பெண்களுக்கு பாதுகாப்பு தரும் சட்டம்?

Byத.வளவன்

Dec 20, 2021

உறவுகளே பகையாய், இல்லங்களே சிறையாய் அமைந்து விடுகிறது பெரும்பான்மை பெண்களுக்கு. எல்லா திசைகளிலிருந்தும் வன்முறை ஏவப்படுவதால் திக்கற்ற ஜீவனாய் திகைத்து நிற்கும் பெண்களுக்கு ‘இந்தியன் பீனல் கோடு(ஐ.பி.சி) 375’ சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. பாலியல் வன்முறையை பற்றி பேசும் ஐ.பி.சி.375ஐயும் அதனுடன் இணைந்து திருப்பங்களையும் பெண்கள் தெரிந்து கொள்வது அவசியம்.


ஐ.பி.சி. 375ன்படி பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளது சம்மதமின்றி, அல்லது மரண பயம், தாக்கப்படும் சம்மதத்ததுடன், அல்லது தான் அவளது சட்டப்பூர்வ கணவன் என்று தவறாக நம்பவைத்து, அல்லது தன்நிறைவற்ற, புரிந்து கொள்ள முடியாத, போதை நிலையில் உடலுறவு கொள்வது பாலியல் வன்முறையாகும். 16 வயதுக்குட்பட்ட பெண்ணிடம் சம்மத்துடனோ, சம்மதமின்றியோ உடலுறவு கொள்வது பாலியல் வன்முறையாகவே கருதப்படும். அவர்களின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், ஒரு பெண்ணிடம் உடலுறவுக்கு முன் அந்த சம்மதத்தை பெற்றிருக்க வேண்டும். உடலுறவுக்கு பின் அல்ல. மரணபயம், துன்புறுத்தல், பெண்ணுக்கு விருப்பமானவருக்கு தீங்கிழைக்கும் அச்சுறுத்தலால் பெறப்படும் சம்மதம் கருத்தில கொள்ளப்படமாட்டாது.


மனைவியில்லாத தூங்கும் பெண்ணொருத்தியுடன் உறவு கொண்டாலும் பாலியல் வன்முறையே, மனநிலை பிறழ்ந்தவர்களை உறவு கொண்டாலும் வன்முறையாகவே கருதப்படும். தவறான நம்பிக்கை (உறவுக்குறியவன் என) காரணமாக உறவை தடுக்காமல் இருந்தாலும் பெண் சம்மதித்ததாக சட்டம் கருதாது. உதவியற்ற நிலையில் அல்லது பயம். நடுக்கம் காரணமாக உடல் இணக்கம் கொண்டாலும் அது சம்மதமாக கருதப்படாது.

ஐ.பி.சி.375ன் படி 15 வயதுக்குட்பட்ட மனைவி(சிறுமி)யிடம் கணவன் உடலுறவு கொண்டாலும் பாலியல் வன்முறையாக கருதப்படுகிறது. உடலியல் ரீதியாக பாலுறவு கொள்ளமுடியாத ஆண்மையற்றவன் செயல் ஐ.பி.சி.354ன் படி நாணம் குலைக்கும் தாக்குதலாக கருதப்படுகிறது.

கணவன் மனைவியிடம் உறவு கொள்ள உரிமை கொண்டவன். ஆதலால் மனைவியை பிறரிடம் உறவு கொள்ள தூண்டாதவரை அவனது வன்முறையான உடலுறவு குற்றமாக கருதப்படாது. பாலியல் வன்முறை வழக்கில் பிராசிகியூசன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்வர் ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டிருப்பது நிரூபிக்கப்பட வேண்டும். அவளது சம்மதமின்றி உறவு நடத்திருப்பது நிரூபிக்கப்பட வேண்டும். எதிர்த்தரப்பினர் உறவுக்கு பெண்ணின் சம்மதம் இருந்ததென்றோ, அவள் ஒழுக்கமற்றவள் என்றோ, அவளுக்கு முன்பே பிறிரிடம் உடல் ரீதியாக பழைய மனக்கசப்பு காரணமாக பழிவாங்க பாலியல் வன்முறை கதை கூறுகிறாள் என்றோ, சிறுமியுடன் உறவென்றால் அவளது வயது தவறாக கூறப்பட்டுள்ளது என்றோ, முதல் தகவல் அறிக்கை சரியாக தயாரிக்கப்பட வில்லை என்றோ, உறவின் போது சம்மதித்தாலே அக்கம் பக்கத்தவரை அழைக்க எண்ணவில்லை என்றோ, உறவைத் தடுத்த வகையில் அவளுக்கோ, குற்றஞ் சாட்டப்பட்டவருக்கோ யாதொரு காயமும் இல்லை என்றோ வாதாடுவர்.

மதுரா வழக்கில் துக்காரம் (எதிர்) ஸ்டேட் ஆஃப் மகாராஸ்டிரா (1979, 2 ஷிநீநீ 143), மதுரா என்ற தாழ்த்தப்பட்ட 15 வயது பெண்ணை காவல் நிலையத்திலேயே பாலியல் வல்லுறவு கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இரு காவலர்கள் விடுக்கப்ட்டனர். அவர்கள் விடுபடுவதற்கு வல்லுறவை தடுத்ததற்கான எந்த அறிகுறியும் மதுராவின் உடலில் இல்லை. அவள் உதவிக்கு கதறவில்லை. அவளது காதலருடன் முன்பே உடல் ரீதியாக உறவு கொண்டவள் என்ற சில காரணங்கள் உதவின. பிராசிகியூசன் தரப்பும் அவளது சம்மதம் குறித்து சந்தேகமின்றி நிரூபிக்க தவறிவிட்டது.
பெண்கள் அமைப்பினர் மதுரா வழக்கை திரும்ப எடுத்துக் கொள்ள வற்புறுத்தினர். ஆனால் தாமதத்தை காரணம் காட்டி உச்சநீதிமன்றம் மறு ஆய்வு மனுவை தள்ளுபடிசெய்து விட்டது. பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் விரைவாக அருகிலுள்ள பதிவு பெற்ற மருத்துவரிடம் சென்று சோதித்துக்கொள்ள வேண்டும். அதே போல் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அவசரமாக சென்று புகார் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதையும் உறுதி கொள்ள வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 154(2)ன் படி இலவசமாக முதல் தகவல் அறிக்கை நகல் பெற உரிமை உண்டு.

தேவைப்பட்டால் அவரது வழக்கறிஞரையும் உடனடி மருத்துவ சோதனைக்கு உட்படுத்தும்படி கோரலாம். இது குற்றத்துக்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க உதவும். மருத்துவ சோதனைக்கு முன்பே குளிக்கவோ, உடைமாற்றவோ வேண்டாம். வல்லுறவாளரிடமிருந்து கிடைத்த துணி, செருப்பு, கண்ணாடி போன்ற பொருட்களை காவலரிடம் ஒப்படையுங்கள். காவலர் வரும் வரை குற்றம் நடந்த இடத்தை அதேநிலையில் விட்டு வையுங்கள். குற்றம் குறித்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்க மறுத்தால் உயர் காவல் அதிகாரியிடம் புகார் செய்யுங்கள் அல்லது ஒரு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனி வழக்கு தொடுங்கள்.


நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைக்கு வரும் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் வயது சான்று சிறந்த சான்றாகும். அது இல்லாதபோது மருத்துவ சான்றிதழை பயன்படுத்தலாம். ஆனால் அது ஒரு நிபுணரின் கருத்தாகவே கருதப்படும். அறிவியல் அடிப்படை சரியாக இல்லாவிட்டால் சட்டப்படியான சான்றாகாது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வன்புணர்ச்சி செய்த ஆணின் மருத்துவ பரிசோதனை அறிக்கை மிகவும் முக்கியம். பெண்ணின் அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம், போராட்டத்தால் உடலில் ஏற்பட்ட ரணம், ஆடையில் படிந்த ரத்தம் அல்லது விந்துக்கறை, ஒருவர் உடலில் காணப்பட்ட மற்றவரின் தலைமுடி ஆகியவை தகுந்த சான்றாகும். மருத்துவ பரிசோதனை பதிவு பெற்ற மருத்துவராலே நடத்தப்படவேண்டும்.


உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பொன்றில், ஓதுக்குப்புறமான தூரத்து கிராமத்தில் வன்புணர்ச்சி செய்யப்பட்ட ஏழைப் பெண்ணொருத்தியின் வழக்கில் மருத்துவச்சான்று தாக்கல் செய்யப்பட தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்ணின் ஆடைகளை இரசாயன சோதனைக்கு காவல்துறையினர் அனுப்புவர். எனவே, காவல் நிலையம் செல்லும் பெண்கள் மாற்றுடை ஒன்றை எடுத்துச் சென்று அதை அணிந்து கொண்டு சம்பவம் நடந்த போது உடுத்தியிருந்த ஆடையை இரசாயன சோதனைக்கு கொடுக்கலாம்.
பொதுவாக எந்தப் பெண்ணும் சுயமரியாதையை இழந்து, காவல்துறை நிலையத்துக்கோ நீதிமன்றத்துக்கோ சென்று தான் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாக கூறுவதில்லை, எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் முக்கிய ஆதாரமாக இவ்வழக்குகளில் பார்க்கப்படுகிறது.

இந்திய தடயவியல் சட்டம் 1872 உடன் சேர்க்கப்பட்ட 114கி பிரிவு, பாலியல் வன்முறை உடலுறவு நிகழ்ந்ததாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அது தன் சம்மதமின்றி நடத்தப்பட்டதாக பெண் கூறினால் அதையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மரண வாக்குமூலம் முக்கிய ஆதாரமாக காட்டப்படுகிறது. மற்ற வழக்குகளைப் போலன்றி பாலியல் வன்முறை வழக்கு முற்றிலும் ஒரு பெண்ணின் நம்பகத் தன்மையையே சார்ந்துள்ளது. எனவே தனிப்பட்ட ஆதாரங்கள் இவ்வழக்குகளில் தேவையற்றாகி விடுகிறது.
குஜராத் அரசு (எதிர்) ஹரிஜிபாய் வழக்கில் 24 மே 1983ல் அளிக்கப்பட்ட தீர்பிலும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘இந்தியா போன்ற நாடுகளில் பாலியல் வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் தவறான குற்றசாட்டு கூற வாய்ப்பில்லை. ஏனெனில், குறுக்கு விசாரனை, மருத்துவ பரிசோதனை, பத்திரிகை செய்தி என்று பலவித வெட்கமிக்கும் கட்டங்களுக்கு அவள் ஆட்பட வேண்டியுள்ளது. எனவே அவளது வாக்குமூலத்தை சந்தேகப்படவோ, அவநம்பிக்கையோடு பார்க்கவோ வேண்டியதில்லை’ என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *