திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் செயினை பறிப்பது போன்ற குற்றங்கள் தொடர்கதையாகி அரங்கேறி வருகிறது.
திருச்சி மாவட்டம் திருவனைக்காவல் அடுத்து நடுக்கொண்டையம்பேட்டை மல்லிகைபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன். இவருக்கு சொந்தமாக 6 லாரிகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாகவே லாரியில் உள்ள பேட்டரிகளும், ஒயர்களும் திருடுபோவதை கவனித்து வந்தார். எனவே ரவீந்திரன் அவரது சகோதரர் மனோகரனை காவலுக்கு வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் லாரியில் திருடுவதற்காக முயன்றுள்ளனர். அப்போது வீட்டின் முன்பு படுத்திருந்த மனோகரனை அடித்து, அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே, எங்கே அக்கம் பக்கத்தினர் வந்துவிடுவார்களோ? என்ற அச்சத்தில் ஓட்டம் பிடித்துள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட மனோகரன் திருடர்களை பிடிக்க முயன்றுள்ளார், அப்போது அவர்கள் தள்ளிவிட்டதில் லாரி மீது மோதிய அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மனோகரன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்ரீரங்கம் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.