• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சின்னமனூர் நகராட்சியில் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்த தூய்மை பணியாளர்கள் நல முகாம்!

​தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 24) பஞ்சாயத்து யூனியன் அலுவலக தெருவில் அமைந்துள்ள திருமண மஹாலில் நடைபெற்ற இந்த முகாமினை, சின்னமனூர் நகர் மன்றத் தலைவர் அய்யம்மாள் இராமு தலைமையேற்று தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் (கூடுதல் பொறுப்பு) உமாசங்கர் அவர்கள் முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, ஆதார் அமைப்பு மற்றும் இ-சேவை மையம் ஆகிய பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து இந்த முகாம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சமூக பாதுகாப்பு, வாழ்வாதார உயர்வு, திறன் மேம்பாடு, நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நலன்களை உறுதிசெய்வதே இம்முகாமின் முதன்மை நோக்கமாகும்.

நிகழ்வின் போது பேசிய நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் அவர்கள், “இச்சிறப்பு முகாமில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான கோரிக்கைகள் மற்றும் உதவிகள் குறித்து மனுக்களாக அளித்து உடனடியாக உரிய தீர்வினை பெற்று கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார். ஆணையாளரின் இந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் தூய்மை பணியாளர்கள் பெரு மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தனர். இம்முகாமினை சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் முன்னின்று மிகச் சிறப்பாக வழிநடத்தி ஒருங்கிணைத்தனர்.