இந்திய அரசு மற்றும் மாநில கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு (ISS) திட்டத்தின் கீழ், பால், முட்டை, இறைச்சி மற்றும் கம்பளி உற்பத்தி தொடர்பான தரவுகள் அறிவியல் முறையில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் இக்கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்கால பருவ கணக்கெடுப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் அனைத்தும் ‘eLISS’ (e-Livestock Integrated Sample Survey) எனும் சிறப்புச் செயலி/மென்பொருள் மூலமாகவே பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டம் கீழப்பூலாநந்தபுரம் கிராமம் மற்றும் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட நவீன ஆடு அடிக்கும் கூடம், வாரச்சந்தை வளாகம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு பணிகளை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, சின்னமனூர் நகராட்சி பொறியாளர் சரவணக்குமார் மற்றும் சுகாதார அலுவலர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்து, “வாரத்திற்கு சராசரியாக 50 ஆடுகள் வரை இறைச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன” என்ற விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
ஆய்வின் போது, கணக்கெடுப்பு பணிகளின் முன்னேற்றம், தரவுகள் சேகரிக்கும் முறைகள் மற்றும் eLISS மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்களின் துல்லியம் குறித்து மண்டல இணை இயக்குநர் விரிவாக ஆய்வு செய்தார். தொடர்ந்து, கணக்கெடுப்பு பணிகளை மிகவும் துல்லியமாகவும், முறையாகவும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கும் கணக்கெடுப்பாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மண்டல இணை இயக்குநர் டாக்டர் கிரிஜா, துணை இயக்குநர் டாக்டர் சுகுமார், உதவி இயக்குநர் டாக்டர் சிவரத்தினா, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் கங்காசூடன், டாக்டர் புவனேஸ்வரி மற்றும் கணக்கெடுப்பாளர் கௌரிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




