• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

“உத்தமபாளையத்தில் தொடர் விபத்துகளை தடுக்க புதிய புறவழிச்சாலை”..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதுப்பட்டி பகுதியில் தொடர்ந்து கடுமையான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத்துகளால் பல உயிர்கள் பலியாவதும், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழலும் நிலவி வருகிறது.

இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான விவாதத்தின் போது, கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
அப்போது பேசிய அவர், “தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டியில் இருந்து குமுளி வரையிலான 4 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தற்சமயம் 2 வழிச்சாலையாக பணிகள் நிறைவுற்றுள்ளன. இருப்பினும், உத்தமபாளையம் மற்றும் புதுப்பட்டி இடைப்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடர் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உத்தமபாளையத்தில் இருந்து உடனடியாக ஒரு புதிய புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகளை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதுடன், சீரான போக்குவரத்துக்கும் வழிவகுக்க முடியும்” என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உத்தமபாளையம் பகுதியில் விபத்துகளை தடுக்கவும், சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் புறவழிச்சாலை அமைப்பதற்கான முதற்கட்ட மற்றும் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான தகுந்த நடவடிக்கைகள் எடுத்து தீர்வு காணப்படும் என்றும் சட்டசபையில் உறுதியளித்தார்.