• Mon. Dec 9th, 2024

நமக்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய்

Byவிஷா

Jun 28, 2024

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் விழாவில், இன்று விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவில், நமக்கு நிறைய நல்ல தலைவர்கள் தேவை என நடிகர் விஜய் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், முதற்கட்டமாக 800 மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி விஜய் கௌரவித்தார்.
பின்னர் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் மேடையில் பேசியதாவது..,
“சாதனை படைத்த உங்களை பார்க்கும் போது நேர்மறை எண்ணம் எனக்குள் அதிகரிக்கிறது. பாசிட்டிவான பவர் மக்களிடம் இருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எல்லா துறையும் நல்ல துறைதான். ஆனால் உழைப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயம். உழைப்பு இருந்தால் கண்டிப்பாக எல்லா துறைகளிலும் வெற்றி நிச்சியம் தான். தமிழகத்தில் உலகத்தரத்தில் இன்ஜினியர், வக்கீல் என பலர் இருக்கிறார்கள். இங்கு நம்மகிட்ட என்ன இல்லை என்றால் நல்ல தலைவர்கள் இல்லை. நான் தலைவர்கள் சொன்னது என்பது வெறும் அரசியல் ரீதியாக மட்டுமில்லை.
நீங்கள் ஒரு துறைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்த துறையில் சிறந்து விளங்குகிறீர்கள் என்றால் ஒரு தலைமை இடத்திற்கு ஈசியாக வர முடியும் அதைத்தான் நான் சொல்கிறேன். இன்னும் நமக்கு நிறைய நல்ல தலைவர்கள் தேவை. அது மட்டும் இல்லை வருங்காலத்தில் அரசியலும் வந்து ஒரு கேரியர் தேர்வாக வரவேண்டும். அப்படி வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். உங்களை போல நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
ஆனால், இப்போதைக்கு படிப்பு மட்டும்தான் முக்கியம் படிப்பில் நன்றாக கவனம் செலுத்துங்கள் அதேபோல் படிக்கும்போதே நீங்கள் மறைமுகமாக அரசியலை கற்றுக் கொள்ளலாம் தினமும் செய்தித்தாள்களை படித்தீர்கள் என்றால் படிக்க படிக்க உங்களுக்கே தெரியும்.

ஒரே செய்தியை ஒரு செய்தித்தாள் ஒரு மாதிரி எழுதுவார்கள் அதே செய்தியை இன்னொரு செய்தித்தாள் இன்னொரு மாதிரி எழுதுவார்கள். ஒரு செய்தியை முதல் பக்கத்தில் ஒரு சில செய்தித்தாள் ஹெட்லைனில் போடுவார்கள் அதே செய்தியை இன்னொரு செய்தித்தாள் கடைசி பேப்பரில் கூட போட மாட்டாங்க. இதனை வைத்து நீங்களே புரிந்து கொள்ளலாம்” எனவும் கூறியுள்ளார்.