
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் 12-வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் கத்தார் உட்பட சில மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. எனவே அப்பகுதியில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக நிறுத்தியுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு செல்லும் ஏர் இந்தியாவின் விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி வழியாகவே பறக்கின்றன. இந்த நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இப்பகுதிக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகள், அமெரிக்க நகரங்களான நியூயார்க், நேவார்க், சிகாகோ மற்றும் வாஷிங்டன் ஆகிய நான்கு விமான நிலையங்களுக்கான சேவைகள், கனடாவின் டொராண்டோவுக்கான விமான சேவை ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
