டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாகப் பரப்புரை செய்து வந்தன. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் டெல்லி மாநில எல்லையில், பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 8) எண்ணப்படுகின்றன.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலோடு, தமிழகத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கும், உத்தரப்பிரதேசத்தின் மில்கிபூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.