
புதிய பார்வை இதழின் முன்னாள் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராசனின் 4-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் விளார் முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதியில் உள்ள அவரது நினைவிடம் மலர்கள் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நினைவு நாளில் பங்கேற்பதற்காக கடந்த 17ஆம் தேதி நள்ளிரவு தஞ்சாவூருக்கு வருகை தந்த வி. கே . சசிகலா பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். இதையடுத்து இன்று காலை தனது கணவரின் நினைவிடத்திற்கு வருகை தந்துசசிகலா மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, நடராசனின் படத்துக்கு ஏலக்காய் மாலை அணிவித்தார். தொடர்ந்து கோ பூஜை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சமாதியில் உள்ள விளக்கில் தீபமேற்றி வழிப்பட்டு கண் கலங்கியபடி 3 முறை சுற்றி வந்தார்.
பின்னர் அங்கு நாற்காலியில் சுமார் 1 மணி நேரம் அமர்ந்திருந்தார். அப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜா, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், நடிகை சி.ஆர்.சரஸ்வதி மற்றும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் பலர் நடராசனின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்கள் சசிகலாவை சந்தித்தும் பேசினர்.
