

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று கூறி தீர்ப்பு வழங்கியது. மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் வழக்கம் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் முஸ்லிம் அமைப்புகளின் மக்கள் சக்தி அதிகம் உள்ள அமைப்பாக செயல்படும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதில் ஒரு பகுதியாக கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் முஹம்மது ஒலி கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் ஜலாலுதீன், துனைத்தலைவர் மசூது சாகிப், துணை செயலாளர்கள், ஹாஜா, பீர்முகமது, அன்வர் சாதிக், தொண்டரணி செயலாளர் புகாரி மற்றும் அனைத்து நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர் சிறுமியர் மூவர்ண உடை அணிந்தும் தேசியக் கொடியை கைகளில் ஏந்தியும் கோஷங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான குழந்தைகள் தலையில் தேசியக்கொடி வண்ணத்தில் மப்தா அணிந்து பங்கேற்றனர்.
இதற்கான பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் ஏடிஎஸ்பி ராஜேந்திரன் டிஎஸ்பிக்கள் கணேஷ், பொண்ணரசு, இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராஜாராம், வேல்கனி உதவி காவல் ஆய்வாளர்கள் கனகராஜன் சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
